பசிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டார் சட்டமா அதிபர்!

ஜனாதிபதி தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் திவி நெகும திணைக்களத்தின் கீழ் ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்து அதனை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு 33 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் திவினெகும பணிப்பாளர் கித்சிரி ரணவக்கவுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் பெறுவதாக நீதிமன்றுக்கு அறிவித்ததை அடுத்தே அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அசாத் நவவி ஆஜரானார்.

அவர், இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக ஏற்கனவே திவி நெகும அறக்கட்டளை நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டதாகவும், அதிலிருந்து அவர்கள் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அந்த வழக்கின் விடயங்களும் இந்த வழக்கின் விடயங்களும் பெரும்பாலும் ஒத்திசைவானவை என குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அசாத் நவவி, அதனால் இந்த வழக்கினை முன் கொண்டு செல்ல முடியாது என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சட்ட மா அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த சட்டத்தரணிகள் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்துள்ள சட்ட மா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரத்தை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்ப்பார்க்கவில்லை என்பதால், அந்த குற்றப் பகிர்வுப் பத்திரங்களை குற்றவியல் சட்டத்தின் 193 ( 4) ஆம் அத்தியாயத்துக்கு அமைய வாபஸ் பெற அனுமதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அசாத் நவவி கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றப் பகிர்வுப் பத்திரிகையை வாபஸ் பெற சட்ட மா அதிபருக்கு அனுமதித்ததுடன், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் திவினெகும பணிப்பாளர் கித்சிரி ரணவக்க ஆகியோரை விடுதலை செய்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!