
பொலன்நறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவருக்கு இதுவரை அரசாங்கத்தில் எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், ஆட்டமிழக்காது அரசியல் மைதானத்தில் விளையாடி வருகிறார். அப்போது கூட இந்த நாடாளுமன்றத்தின் பின்னர், மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் முடிவடைந்து விடும் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மைத்திரிபால சிறிசேன வேறு விதமாக சிந்திப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் தனக்கு நெருக்கமானவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், மைத்திரிபால சிறிசேன தனது எதிர்கால அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன் தான் மீண்டும் அரச தலைவராக பதவிக்கு வர எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாவிட்டால், முழுமையான அதிகாரங்களுடன் கூடிய பிரதமர் பதவிக்காவது வர வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது நோக்கம் சம்பந்தமான வாதத்தை தெளிவுப்படுத்தியுள்ள மைத்திரி, பல ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ராஜபக்சவினருக்கும் மீண்டும் அரச அதிகாரத்திற்கு வர முடியுமாயின், எந்த குற்றச்சாட்டை எதிர்நோக்காத தன்னால், ஏன் அரச தலைவராக பதவிக்கு வர முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபக்சவினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எந்த நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தப்படாத போதிலும் அந்த குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் ஆழகமாக வேரூன்றி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மைத்திரி, தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத காரணத்தினால், தன்னால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் புதிதாக அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் இயங்க செய்யும் முயற்சியில் சுதந்திரக் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதே இதன் நோக்கம் என தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் மேலும் சில நடவடிக்கைகளை எதிர்காலத்தில் காண முடியும் எனவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!