பதவி விலகப் போவதாக விஜயகலா அறிவிப்பு!

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ நான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது. விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர் இது குறித்து முடிவை எடுத்துள்ளேன்.

என்னுடன் கட்சியின் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்ட போது, எனக்குத் தெரியும் நான் எந்த இடத்தில் பிழைவிட்டுள்ளேன் என்று. இந்த அரசாங்கத்தில் நான் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு நான் இப்படியொரு கருத்தை தெரிவித்த வேளை நான் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் எனக்குத் தெரியும்.

அந்தவகையில் நான் உடனடியாக கட்சியின் தலைவருக்கு கூறியிருந்தேன் நான் என்னுடைய பொறுப்பிலிருந்து மீறிவிட்டேன். ஆகையால் நீங்கள் நடவடிக்கை எடுத்து விசாரணை செய்யும் வரையும் நான் தற்காலிகமாக எனது பொறுப்பிலிருந்து உடனடியாக இராஜிநாமா செய்கின்றேன் என்று. இந்நிலையில் எனது கட்சியின் தலைமைப்பீடம் நான் உடனடியான இராஜிநாமா செய்வதற்கு இடமளிக்கவில்லை.

இதனால் நான் உடனடியாக கொழும்புக்கு சென்று கட்சித் தலைவருடன் நேரடியாக தொடர்பு கொண்டேன். நேரடியாகவும் எனது நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளேன்.

நான் இன்றோ அல்லது நாளைக்கோ அதற்குரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலேற்படுத்தா வண்ணம் அவர்கள் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு நானும் என் சார்பில் பொறுப்பான முடிவை எடுத்துள்ளேன். அந்த முடிவுக்கு இணங்க இந்த அரசாங்கம் எங்களையும் இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!