இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற தயார்: சசிகலா அதிரடி!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்றார் சசிகலா, இந்த நிலையில் அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, சசிகலா, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அதிமுக கொடிகட்டிய காரில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சென்ற அவர், அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி கல்வெட்டையும் சசிகலா திறந்து வைத்தார்.

அதில், அதிமுகவின் பொதுச்செயலாளார் வி.கே.சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் பொன்விழா கூட்டத்தில் பேசிய அவர், நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டு தான் சென்றேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தி செல்வேன். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் இணைந்து செயல்படுவேன். எல்லோரையும் ஒன்றிணைத்து நல்லபடியாக 2024 மக்களவைத் தேர்தலில் பெரிய வெற்றி பெறுவோம்.

இது தொண்டர்களுக்கான இயக்கம். எங்கள் இயக்கத்தலைவர்கள் இருவரும் எந்த வழியை பின்பற்றினாரோ அதன்படி செயல்படுவோம். என்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!