அமைச்சர்கள் வெளிநாடு பறக்கத் தடை!

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது உத்தியோகபூர்வமாகவோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பாகும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

எனவே, வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரின்போது சிலவேளை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிரணி வாக்கெடுப்பைக் கோரும்.

மேலும் சில தரப்புகள் யோசனைகளை முன்வைப்பார்கள். இவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும், எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் தோற்கடிக்காமல் இருப்பதற்காகவுமே அமைச்சர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைகள் இருப்பின் அது தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு அரச தலைமையால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!