ஜனாதிபதியினால் நாட்டை நிர்வகிக்க முடியாது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பது பல்வேறு காரணிகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறப்பிட்டார்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் தற்போது திரும்பும் திசையெல்லாம் பிரச்சினைகளாகவே உள்ளது உரம் பிரச்சினை, ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க பிரச்சினை என அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரையில் உறுதியான தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலத்தில் 480 போராட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் அப்போராட்டங்கள் தற்போதைய போராட்டங்களை போன்று உச்சமடையவில்லை.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நிர்வாகத்தில் அப்போராட்டங்கள் தளர்வடைந்தன.தற்போது இடம்பெறும் போராட்டங்கள் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தில் முழுமையான நம்பிக்கை வைத்து ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

ஆனால் இன்று சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை நூற்றுக்கு நூறு வீதமல்ல, நூற்றுக்கு இருநூறு வீதம் இல்லாமல் போயுள்ளன. டி.எஸ்.சேனாநாயக்க பரம்பரையும், பண்டாரநாயக்கவின் பரம்பரையும் நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றினார்கள்.

ஆனால் அவர்கள் தற்போது அரசியலில் இல்லை.ராஜபக்ஷர்களும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள். அவர்களின் அரசியல் இருப்பும் இத்துடன் நிறைவடையும் என்றே ஊகிக்கிறோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நூற்றுக்கு நூறு வீதம் நாங்கள் பொறுப்பு கூற வேண்டும் என மக்கள் எம்மை நோக்கி விமர்சிக்கிறார்கள்.மக்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அரசாங்கததின் தவறான தீர்மானங்களை திருத்திக் கொள்ளும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் அரசாங்கமும் அழிவடையும்,அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நாங்களும் அழிவடைவோம்.விவசாயிகளின் போராட்டம் எல்லை கடந்துள்ளது.
இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். நாட்டுமக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு வீதிக்கிறங்கி போராட முன்னர் ஒரு தீர்வை அரச தலைவர்கள் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜக்ஷவினால் நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது.என்பது பல்வேறு காரணிகள் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மாகாண சபை தேர்தல் இடம்பெற்றால் மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.தேர்தல் எப்போது நடத்தப்படும்.என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!