நெருங்கும் கொரோனா 3ஆவது அலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா 3ஆவது அலை ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலும் , 2 ஆவது அலை கடந்த பிப்ரவரி மாதத்திலும் பரவத் தொடங்கியது . 2 ஆவது அலையில் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகமாக இருந்தது .
    
அதிகபட்சமாக கடந்த மே மாதம் 21 ஆம் தேதி 36,184 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் . அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் 467 பேர் உயிரிழந்தனர் . கடுமையான முழு ஊரடங்கு , தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பும் , உயிரிழப்பும் குறையத் தொடங்கியது .
தற்போது தமிழகத்தில் 1,200 க்கும் கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா 3ஆவது அலை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வர வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3ஆவது அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொடங்குமென கணிக்கப்பட்டது. ஆனால் தொடங்கவில்லை என்பதால் தீபாவளி பண்டிகையை மையப்படுத்தி 3ஆவது அலை வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

70 சதவீதம் அளவுக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்திவிட்டால் 3ஆவது அலை பாதிப்பை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 கோடி பேரில் 68 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில்70 சதவீத இலக்கு எட்டப்பட்டு விடும். அதனால் 3ஆவது அலை இப்போது தொடங்குவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!