புலிகள் என கூட்டமைப்பு எம்.பிக்களை நோக்கி கூச்சல்!

வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு துறைசார் மேற்பார்வை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள்” என ஆளுந்தரப்பு உறுப்பினர்களினால் விமர்சிக்கப்பட்டதை அடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் வெள்ளிக்கிழமை காலை வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அமைச்சர் சி.பி ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறீதரன், வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் திட்டமிட்டபடி விடயங்கள் முன்னெடுக்கப்படாமல் வேறு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிக்கொண்டிருந்தன. இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியபோதும் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன்,கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற காணி அபகரிப்பு , மற்றும் கிளிநொச்சியில் ஆனை விழுந்தான், ஜெயபுரம் பகுதி ஆக்கிரமிப்புகள் தொடர்பில் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்த போது அரச தரப்பின் புத்தளம் மாவட்ட எம்.பி. யான மாயாதுன்ன சிந்தக அமல் சிறீதரன் எம்.பியை பார்த்து ‘புலி .. புலி’என கூச்சலிட்டு அவரின் கருத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார். அவருடன் சேர்ந்து வேறு சில ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் இவ்வாறு கூச்சலிட்டுள்ளனர், பயங்கரவாதிகள் எனவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.



மாயாதுன்ன சிந்தக அமல் எம்.பி. யின் புலிக்கூச்சலுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் நாங்கள் புலிகள் என்றால் எங்களை ஏன் கூட்டத்துக்கு அழைத்தீர்கள்.

எமது மாகாணத்தின், மாவட்டத்தின் ,மக்களின் பிரச்சினைகளை பேசினால் புலி எனக் கத்தும் உங்களிடம் நாம் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பிவிட்டு இந்தக்கூட்டத்தில் இனி நாம் பங்கேற்க மாட்டோம் எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதன் போது ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சி எம்.பி.யான சந்திம வீரக்கொடி தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதுடன் அவர்கள் தமது மக்கள் தொடர்பில் பேசுவதற்கு உரிமை உண்டென சுட்டிக்காட்டினார்.

எனினும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய எம்.பி. க்கள் மௌனம் சாதித்தனர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட முக்கிய சிலரும் பங்குபற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறீதரன் எம்.பி இது குறித்து கூறுகையில், காணி விடயங்கள் குறித்து எமது தரப்பு கருத்துக்களை கூறவே நினைத்தோம், கூட்டத்தில் எமது தரப்பு கருத்தை முன்வைக்க முயற்சித்த வேளையில் கூட்டத்தில் இருந்த சிங்கள எம்.பிக்கள் பலர் எம்மை புலிகள் என விமர்சித்து எமது கருத்துக்களை முன்வைக்க விடாது தடுத்தனர். நாம் மக்களின் பிரச்சினைகளை எங்கும் பேச முடியும், அதற்கு எமக்கு உரிமை உள்ளது. ஆனால் இவ்வாறு ஆளுந்தரப்பு சிங்கள உறுப்பினர்கள் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக செயற்பாடாகும்.

இதனை நாம் சுட்டிக்காட்ட முனைந்த வேளையில் அதற்கும் இடம் வழங்கப்படவில்லை. எனினும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை கண்டித்தார், எம்மை புலிகள் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் விமர்சித்த விடயத்தை எதிர்த்து அவர் பேசினார். இது குறித்து அமைச்சர் சி.பி ரத்னாயகவிடம் நாம் தெரிவித்தோம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!