இழுவை மடி மீன்பிடி முறையை விஞ்ஞான முறைப்படி அனுமதியுங்கள்!

அடி முறையை தடை செய்யுங்கள், இழுவை மடி மீன்பிடி முறையை விஞ்ஞான முறைப்படி அனுமதியுங்களென தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
‘இந்திய- இலங்கை இடையிலான கடல் எல்லையில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் ஆண்டாண்டு காலமாக இந்தப் பகுதியில் இருந்த போதிலும் இழுவைப் படகுகள் வந்ததன் பின்பு பிரச்சினைகள் ஆரம்பித்தது. இழுவைப் படகுகள் தொடர்பில் கண்மூடித்தனமான சிந்தனைகள் எம்மத்தியில் காணப்படுகின்றன.உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே இழுவைப் படகை தடை செய்துள்ளன.

அடி மடி என்பதுதான் தவறானது.அது கடலின் அடி வரையுள்ள வளங்களை சுரண்டுவதன் மூலம் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.மீன்வளம் முழுவதுமாக அழிக்கப்படுகின்றது. ஆழம் குறைந்த பகுதிக்கு வரும்போதே இந்தப் பிரச்சினை உருவாகிறது.அடி முறையை தடை செய்யுங்கள். இழுவை மடி முறையை தடை செய்ய வேண்டாமென நான் மாகாண சபையிலும் தெளிவாக கூறியிருந்தேன்.

சிலர் நினைத்தார்கள் நான் ஒரு சிலருக்காக ஆதரவாக இருக்கின்றேன் என்று.நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் ஏன் இந்த இழுவை மடி முறையை தடை செய்யவில்லை. கடலோர காவல்படை, கடற்படை என்பன நவீன முறைகள் கொண்டிருந்தும் கூட இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுவதை தடுக்க முடியவில்லை.

இரு நாட்டு மீனவர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க வேண்டும்.இரு நாட்டு அரசுகளும் பேசி இதற்கு முடிவுகட்ட வேண்டும்.இரண்டு பகுதியிலும் உயிர்ச் சேதங்கள் வரக்கூடாது.

மீனவர்கள் தவறு செய்தால் அவர்களை கைது செய்யுங்கள். அவர்களை அடிப்பதோ துன்புறுத்துவதோ உங்களுடைய பணி அல்ல.தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதி கடலில் தொழில் செய்கின்றார்கள்.இதனை அனுமதிக்க முடியாது. எங்கள் நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குரியது.அதை போல இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு.

எமக்காக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கு,மீனவர் பிரச்சினையை வைத்து எங்களுக்கு எதிராக திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!