ஜேர்மனியில் கொரோனாவின் 4-வது அலை: எச்சரிக்கும் மருத்துவத்துறை நிபுணர்கள்!

ஜேர்மனியில் கொரோனாவின் உண்மையான நான்காவது அலை துவங்கிவிட்டது என்று கூறும் மருத்துவத்துறை நிபுணர்கள், நிலைமை மேலும் மோசமாகும் என எச்சரிக்கிறார்கள். ஜேர்மனியில் கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரித்து வருகிறது. ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்ற கணக்கீட்டு எண் மே மாதத்திற்குப் பின் முதன்முறையாக 90ஐ தாண்டியுள்ளது.

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அந்த ஏழு நாள் கணக்கீட்டு எண் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி அது 95.1 ஆக உள்ளது. இதுவே, ஒரு வாரத்திற்கு முன் 68.7ஆகத்தான் இருந்தது.
ஜேர்மனியில் இன்று புதிதாக 19,572 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 116 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

கடந்த மூன்று மாதங்களாக ஜேர்மனியில் கொரோனா நிலைமை சற்று சீராக காணப்பட்டது, சில நேரங்களில் குறையவும் செய்தது. நான்காவது அலை இனி உருவாக வாய்ப்புள்ளதா என பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது.

ஆனால், திடீரென கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. The Robert Koch நிறுவனமும் மருத்துவத்துறை நிபுணர்களும் எச்சரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளார்கள்.

செப்டம்பர் இறுதியிலிருந்து, ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்பதைக் காட்டும் கணக்கீட்டு எண் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ள Robert Koch நிறுவனம், அது கடந்த வாரத்தில் அனைத்து வயதினரிடையேயும் தெளிவாக புலப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

அத்துடன், இலையுதிர்காலத்திலும், குளிர் காலத்திலும் கொரோனா தொற்றுக்காளாகுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கிறது Robert Koch நிறுவனம்.

நேற்றைய நிலவரப்படி, ஜேர்மன் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1,540ஆக உள்ளது, அவர்களில் 850 பேருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இம்மாத துவக்கத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் 1,300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!