சமிக்ஞை வழங்கும் தூண்களாக இருக்க முடியாது – அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சுசில்

சட்டங்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அதனை மேற்கொள்ளாது வேறு எங்கோ ஓரிடத்தில் சட்டங்களை உருவாக்கி அவற்றை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து, கைகளைத் தூக்குமாறு கூறினால், தான் அதற்கு தயாரில்லை என சுசில் பிரேம ஜயந்த (Susil Premajeyantha) கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் நிலவும் மோதல்களின் மற்றுமொரு தோற்றத்தை கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரையின் மூலம் காணக் கூடியதாக இருந்தது.

எதற்கும் கைகளை உயர்த்தும் சமிக்ஞை வழங்கும் (சிக்னல்) தூண்கள் போன்று இருப்பதற்காக மக்கள் வாக்களித்து தம்மை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய சுசில் பிரேம ஜயந்த,
சட்டங்களை உருவாக்க நாங்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம். ஆனால் சட்டங்களை வேறு இடத்தில் உருவாக்கி விட்டு, இங்கு கொண்டு வந்து எம்மை கைகளை உயர்த்துமாறு கூறினால், அது சரியாக இருக்காது.

நாங்கள் முன்பள்ளிக்குச் சென்று நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அப்படியானவர்கள் இருக்கக் கூடும். நான் 1982 ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தேன்.

1985ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்திரியப்பிரமாணம் செய்தேன். தற்போது 36 ஆண்டுகள். நாடாளுமன்றத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கிலும் நாங்கள் வாதாடினோம். சிலருக்கு அவை தெரியாது.

வேறு இடத்தில் உருவாக்கப்படும் சட்டங்களை இங்கு கொண்டு வருகின்றனர். நாங்கள் அதற்கு கைகளை உயர்த்த வேண்டும். சமிக்ஞை வழங்கும் தூண்களாக இருப்பதற்கு மக்கள் எம்மை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்குச் சென்றமை எமக்கு நினைவில் இருக்கின்றது.

அதற்கான நடைமுறைகள் என்ன?. நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை நிறைவேற்றி, தெரிவுக்குழுவை நியமித்து, ஆறு துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அந்த ஆறு துணைக்குழுக்களே சட்ட வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர். அப்படியானால் தற்போது இருப்பது நாடாளுமன்றமா?.

நாம் எதற்காக இங்கு இருக்கின்றோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது எப்படி என்று தற்போதுள்ள சிலருக்குத் தெரியாது.

இவற்றைக் கூற நாங்கள் அச்சப்படவில்லை. மக்கள் தமது வாக்குகள் மூலம் எங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக இருந்த போதிலும் ஒரு முறையாவது தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

நான் 12 தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைத் தயாரித்துள்ளேன். மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மூன்று வேட்புமனுக்களுக்குக் கையெழுத்திட்டுள்ளேன். சிலருக்கு அவை நினைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.