அருண பத்திரிகை ஆசிரியரிடம் சிஐடி விசாரணை!

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக அருண சிங்களப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடம் சி.ஐ.டி. விசாரணை நடத்தியுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியருமான மஹிந்த இலேபெருமவிடம், சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.

குறித்த பத்திரிகை செய்தியை ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர முழுமையாக நிராகரித்துள்ள நிலையில், அந்த செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பூரண விசாரணை நடத்துமாறு , பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படியே அது குறித்த விசாரணைகள் உடனடியாக சி.ஐ.டி.யினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே பத்திரிகை குறித்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தியாவிடமிருந்து நனோ நைட்ரஜன் யூரியா திரவ பசளை இறக்குமதியின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற அமர்வின் போது சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்தே இன்று 24 ஆம் திகதியிடப்பட்ட வாராந்த சிங்களப் பத்திரிகை, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர்வை அதனுடன் இணைத்து வெளிப்படுத்தல் ஒன்றினை முன் வைத்திருந்தது. இந் நிலையிலேயே தற்போது அது பெரும் சர்ச்சைகலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!