இலங்கையை அண்மித்துள்ள தாழ் மட்ட வளிமண்டல குழப்பம் – பாதிப்பு குறித்து தகவல்

இலங்கையை அண்மித்துள்ள தாழ் மட்ட வளிமண்டல குழப்பம், அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையைப் பாதிக்கும் என வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும்,
மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை இலங்கையை அண்மித்துள்ள குறைந்த மட்ட வளிமண்டல குழப்பம் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காலநிலையை பாதிக்கும்.

எனவே, எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கத்தினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கிடையில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (15 – 25) கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!