தமிழகத்தில் நீடிக்கும் கனமழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!