சீனாவின் நில எல்லை சட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த தருணத்தில், சீன நாடாளுமன்றம், எல்லைகளை பாதுகாப்பது, சுரண்டுவது தொடர்பாக ஒரு சட்டம் இயற்றி உள்ளது. நில எல்லை சட்டம் என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது.

சீனாவின் இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் புனிதமானவை, மீற முடியாதவை என்று இந்த சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த சட்டம், இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி அளித்தபோது, சீனாவின் புதிய நில எல்லை சட்டம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இந்த சட்டத்துக்கு இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லை பிரச்சினையில் இந்தியாவும், சீனாவும் இன்னும் தீர்வு காணவில்லை. இரு தரப்பும் சரியான, அர்த்தமுள்ள, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை சமமான நிலையில் ஆலோசனை மூலம் எட்ட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இடைக்கால ஏற்பாடாக இந்திய, சீன எல்லை பகுதிகளில் அமைதியையும், சமாதானத்தையும் பேணுவதற்கு என இரு தரப்பிலும் பல்வேறு இரு தரப்பு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய சட்டத்தின் பெயரால் சீனா நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

மேலும், இந்த சட்டமானது, 1963-ம் ஆண்டு போடப்பட்டு, இது சட்டவிரோதமானது, செல்லாதது என்று இந்தியாவால் கூறப்பட்டு வருகிற சீன, பாகிஸ்தான் எல்லை உடன்பாடுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!