11 பேரின் மரணம் தற்கொலையே: வெளியானது சிசிடிவி காட்சிகள்

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது.

டெல்லியின் புராரி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்று கிழமை 10 பேர் துாக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் எழுதிய டயரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என எழுதியிருந்தனர். இதனால், பொலிஸார் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வந்தனர்.

மேலும் அந்த வீட்டின் பின் பக்க சுவரிலிருந்து, 11, குழாய்கள் மர்மமான முறையில், சுவரில் பொருத்தப்பட்டிருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

இந்நிலையில் 11 பேரின் மரணம் தற்கொலை தான் என தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. 11 பேரின் மரணத்தில் எந்த சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

இறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மேலும் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இது கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய விவகாரத்தில் தீர்வு கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!