நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 105 கோடியை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

தமிழகத்தில் ஆரம்ப கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டினாலும், பின்னர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போடும் பணிகள் விறூவிறுப்பாக நடைபெற்று வருவதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது. தற்போது அந்த எண்ணிக்கை நேற்று 105 கோடியை தாண்டியது.

இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 51.59 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதில் அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக தற்போது இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வெற்றிகரமாக 105 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி இயக்கம் புதிய சாதனையை எட்டியிருப்பதால் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!