பிரித்தானியாவில் சூட்கேசுக்குள் சடலமாக மீட்கப்பட்ட புதுமணப்பெண்!

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் திருமணம் முடிந்த நான்காவது நாள் பெண் ஒருவர் சூட்கேசுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், Dawn Walker என்பது அவரது பெயர் எனவும் கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் முடிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் Dawn Walker என குறிப்பிட்டுள்ள அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், இனி அவரது தோழமையை எங்களால் அனுபவிக்க முடியாது என கண்கலங்கியுள்ளார்.

Dawn Walker-ன் சடலம் ஒரு சூட்கேஸுக்குள் திணிக்கப்பட்டு, சாலையோரத்தில் மறைவு செய்யப்பட்டிருந்தது என்கிறார் இன்னொரு நண்பர். தற்போது அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

புதன்கிழமை திருமணம் செய்து கொண்ட Dawn Walker ஞாயிறன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தங்களால் நம்ப முடியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். மிகவும் எளிமையான, இரக்க குணம் கொண்டவர் Dawn Walker.

உதவி கேட்டு யார் அவரை நாடினாலும் ஏமாற்றத்துடன் திரும்பமாட்டார்கள் என்கிறார்கள் அவரது நெருங்கிய தோழிகள். ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4.30 மணியளவில் குறித்த சூட்கேஸ் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கொலை வழக்கில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயன்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள், பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!