கரன்னகொட வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கைவிடுமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதால் கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை தொடர வேண்டாம் என அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டுமானால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அல்லது எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஆகவே வாய்மொழி கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்து மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 14வது சந்தேக நபராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட பெயரிடப்பட்டார்.

இந்நிலையில் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து மற்ற 13 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை தொடர சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நீதிமன்றில் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!