அவுஸ்திரேலியாவில் முடிவுக்கு வந்த மர்மம்!

அவுஸ்திரேலியாவில் 18 நாட்களுக்கு முன் காணாமல் போன நான்கு வயது சிறுமி, பூட்டிய வீட்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகருக்கு வடக்கே Macleod பகுதியில், கூடாரம் அமைத்து தனது பெற்றோருடன் விடுமுறையை கழித்து வந்த 4 வயது சிறுமி மாயமானார்.

கடந்த அக்டோபர் 16-ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கிளியோ ஸ்மித் (Cleo Smith) என்ற அந்த 4 வயது சிறுமி தொலைந்துபோனதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த இரண்டரை வாரங்களாக பொலிசார் மற்றும் அவசர உதவிக்குழுவினர் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, சிறுமியை கண்டுபிடிக்க துப்பு தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர் சன்மானம் தருவதாக அரசாங்கம் அறிவித்தது.

அதனையடுத்து, கிளியோ ஸ்மித் காணாமல் போன செய்தி நாடு முழுக்க பரவியது. சமூக வலைத்தளங்களிலும் சிறுமியின் புகைப்படங்களுடன் #BringCleoHome என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

அவர் காணாமல் போனத பிராந்தியம் முழுவதும் ஒரு பெரிய தேடலைத் தூண்டியது மற்றும் கிளியோ தனது குடும்பத்துடன் வந்த இரவில் முகாமில் இருந்த 110-க்கும் மேற்பட்டவர்களை பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கிளியோ ஸ்மித்தை காணாமல் போன இடத்திலிருந்து 46 மைல் தொலைவில் Carnarvon-ல் புறநகர் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் ஒரு வீட்டை உடைத்து, ஒரு அறையில் பூட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமியை பொலிஸார் மீட்டனர்.

அதனையடுத்து, கிளியோ உயிருடன் நலமாக இருப்பதாகவும், பெற்றோருடன் மீண்டும் இணைந்ததாகவும் மேற்கு அவுஸ்திரேலிய காவல்துறை துணை ஆணையர் கர்னல் பிளாஞ்ச் உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், சம்பவ இடத்தில் “அதிகாரிகளில் ஒருவர் சிறுமியை தன் கைகளில் தூக்கிக் கொண்டு, அவரிடம் “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சிறுமி “என் பெயர் கிளியோ” என்று கூறியுள்ளார்.

மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, கார்னார்வோனைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் சிறுமி மீட்கப்பட்ட வீட்டிலிருந்து 7 நிமிட தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுமி கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், சிறுமியை மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!