கனடாவை உலுக்கிய வழக்கில் வெளியான தீர்ப்பு!

ரொறன்ரோவில் அனைத்து ஆண்கள் கத்தோலிக்கப் பள்ளியில் மாணவர்கள் கும்பல் ஒன்று சக மாணவனை சீரழித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான மாணவனுக்கு 2 ஆண்டுகள் நன்னடத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 மாணவர்கள் மீது இரண்டு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளதுடன், இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கவும் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மாணவன் மட்டுமே நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளான். எஞ்சியவர்களில் நால்வர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர்கள் எவரும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டாம் என்றே தெரிய வந்துள்ளது. மேலும், குற்றவாளிகள் அல்லது பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளிட்ட எவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், முக்கிய குற்றவாளியான மாணவனுக்கு கண்டிப்பாக மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

ஆனால் மாணவர்களின் எதிர்காலம் கருதி நன்னடத்தை கட்டுப்பாடுகள் மட்டும் 2 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் ரொறன்ரோவின் பிரபலமான புனித மைக்கேல் பள்ளியில் மாணவன் ஒருவரை சக மாணவர்கள் கும்பல் ஒன்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியது.

ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளதும், சித்திரவதைக்கு உட்படுத்தியதும் பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மாணவன் மூன்று மாதங்கள் வரையில் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட வேண்டும் எனவும், இது வன்முறை மட்டுமல்ல அவமானகரமான சம்பவம் எனவும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

பள்ளியில் மாணவர்களுக்கான ஓய்வறையில் வைத்து சக மாணவன் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது மொபைல்போனில் பதிவு செய்யப்பட்டு, 22 நொடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந்த நிலையிலேயே நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!