”பஞ்சாங்கம்” அச்சிட்ட பசில் தொடா்பில் சட்டமா அதிபாின் நிலைப்பாடு?

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள “பஞ்சாங்கம்“ அச்சிட்ட வழக்கில், தனது நிலைப்பாட்டை எதிர்வரும் 11ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொிவித்துள்ளாா்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்துடன் 50 லட்சம் பஞ்சாங்கங்களை 29.4 மில்லியன் ரூபாவிற்கு அச்சடித்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக, சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் இன்று இது தொடா்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக மேலதிக மன்றாடியாா் நாயகம் திலீபா பீாிஸ் தெரிவித்தார்.

2014 நவம்பர் 23 முதல் டிசம்பர் 31 வரை இந்த பஞ்சாங்கங்களை அச்சடித்ததன் மூலம் இந்த நாட்டின் குடிமக்களை, ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வைப்பதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முயற்சித்ததாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த வழக்கில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட 32 பேரை, சட்டமா அதிபர் சாட்சிகளாக குறிப்பிட்டிருந்தாா்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!