முடிந்தால் செய்யுங்கள்; இல்லையென்றால் செல்லுங்கள்!

விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் ஏமாற்றி வாக்குகளைபெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது எமக்குத் தெரியாது, எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லும் நிலைக்கு அரசு விழுந்துவிட்டது. முடிந்தால் செய்யுங்கள்; இல்லையென்றால் செல்லுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“சரியான வருமானம் இல்லையென்றால் நாளை இந்த நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் இறப்பார்கள். அப்படியென்றால் இந்த ராஜபக்சக்களின் பொருளாதார முகாமைத்துவம் எங்கே? சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் கொண்டுவந்த வேலைத்திட்டங்கள் எங்கே? என்ன ஆனது? யார் இதன் தலைவர்? யார் இவற்றைச் செய்வது?

வர்த்தமானிகளை வெளியிட்டது பந்துல குணவர்தன, அந்த வர்த்தமானிகளை இரத்து செய்தது யார்? பந்துல இரத்துச் செய்தாரா? பஸில் ராஜபக்ச இரத்துச் செய்தாரா? என்பது எமக்குத் தெரியாது.
சிக்கலான , ஆட்சி செய்ய முடியாத, பொருளாதார முகாமைத்துவம் இல்லாத, எந்தவொரு தூரநோக்கும் இல்லாத, பணியாற்ற முடியாத முழுவதுமாக தோல்வியடைந்த ஓர் அரசு இது என்பதால் நாட்டு மக்கள் பாரிய குழிக்குள் விழுந்துள்ளார்கள்.

இவர்களுக்குத் தலையில் ஏதும் பிரச்சினையா? இவர்கள் எம் மக்களை உண்ண வழியில்லாத நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்கள்.

இதில் இன்னும் சாப்பிடச் சொல்கின்றார்கள். மக்கள் எப்படி உண்பார்கள்? சரியாக உண்பதற்கு மக்களுக்கு பணம் இல்லை.

மோசமான ஒரு நிலை எமக்கு உருவாகியுள்ளது. இவர்கள் எம் மக்களை ஏமாற்றி விட்டார்கள். விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் ஏமாற்றி வாக்குகளையும் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது எமக்கு தெரியாது, எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லும் நிலைக்கு அரசு விழுந்துவிட்டது.

முடிந்தால் செய்யுங்கள்; இல்லையென்றால் செல்லுங்கள். இப்படியே இன்னும் கொஞ்சம் காலம் செயற்படுவீர்கள் என்றால் மக்கள் விளக்குமாறால்தான் அடித்து விரட்டுவார்கள். மக்களுக்கு அந்த அளவுக்கு இந்த அரசின் மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. அப்படியான ஒரு கீழ் மட்டத்திற்கு இந்த அரசு விழுந்துவிட்டது” என்றார்.
  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!