மூடநம்பிக்கையால் பறிபோன மகளின் உயிர்: தந்தை கைது!

கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சதார். இவரது 11 வயது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மகளை அங்குள்ள மசூதிக்கு அப்துல் சதார் அழைத்து சென்றார். மசூதியின் இமாம் முகமது உவைஸ், சிறுமிக்கு புனித நீரை கொடுத்து குடிக்க செய்துள்ளார்.

    
“புனிதநீர் குடித்திருப்பதால் சிறுமிக்கு குணமாகிவிடும். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டாம்” என்று இமாம் கூறியுள்ளார். இதை நம்பிய அப்துல் சதார், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இதன் காரணமாக சிறுமி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அப்துல் சதாரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் தந்தை அப்துல் சதார், இமாம் முகமது உவைஸ் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து கண்ணூர் மாவட்ட எஸ்.பி. இளங்கோ கூறும்போது, ‘மதநம்பிக்கை காரணமாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதன்காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இமாம் முகமது உவைஸின் தவறான வழிநடத்துதலால் ஏற்கெனவே 4 பேர் மருத்துவ சிகிச்சை இன்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!