திரைப்பட பாணியில் சுவிஸில் நடந்த கொள்ளை சம்பவம்!

சுவிட்சர்லாந்தில் கொள்ளை கும்பல் ஒன்று கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து தங்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஹாலிவுட் அதிரடித் திரைப்படத்திற்கு இணையான இந்த சம்பவம், புதன்கிழமை மாலை, பிரெஞ்சு எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு சுவிஸ் மாகாணமான ஜூராவில் உள்ள Basscourt-ல் நடந்துள்ளது.
    
Le Matin நாளிதழின் படி, ஆயுதம் ஏந்திய 6 நபர்கள், பெயர் குறிப்பிடப்படாத கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரின் வீட்டுக்குள் புகுந்து, அவரை அச்சுறுத்தி அவரது முழு குடும்பத்தையும் பிணைக் கைதிகளாக பிடித்தனர்.

பின்னர், மொத்த குடும்பத்தையும் அந்த நபரின் கடிகார நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு ஒரு காரில் துப்பாக்கி முனையில் அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.

அப்போது கொள்ளையர்கள் அங்கிருந்த தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற மூலப்பொருட்களைத் திருட வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

பிராந்திய வழக்கறிஞரின் கூற்றுப்படி, அவர்கள் எவ்வளவு தங்கத்தை திருடினார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

திருடி முடித்ததும், கொள்ளையர்கள் குடும்பத்தை கைவிட்டு, அருகிலுள்ள காட்டில் தங்கள் காரில் ஏறி பிரெஞ்சு எல்லையை நோக்கி ஓட்டிச் சென்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின்போது அலாரம் விரைவாக ஒலிக்கப்பட்டது, மேலும் பிராந்திய பொலிஸும் சுவிஸ் எல்லை முகவர்களும் அருகிலுள்ள அனைத்து எல்லைக் கடப்புகளிலும் சாலைத் தடைகளை அமைத்தனர்.

ஆனால், இரண்டு வாகனங்களில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள், லுசெல்லில் உள்ள சாலைத் தடைகளில் ஒன்றை உடைத்துக்கொண்டு சுங்க முகவரைத் தாக்கி காயப்படுத்தி தப்பிச் சென்றனர்.
பின்னர் இரண்டு வாகனங்களும் பிரெஞ்சு பெல்ஃபோர்ட் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு MP5 சப்மஷைன் துப்பாக்கியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!