உலக தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த பிரதமர் மோடி!

மார்னிங் கன்சல்ட் பொலிடிக்கல் இன்டெலிஜன்ஸ்’ என்ற உலகளாவிய கருத்து கணிப்பு நடத்தும் அமைப்பு, 13 நாடுகளின் தலைவர்களிடையே மக்களால் விரும்பப்படுகிற, மிகவும் பிரபலமான உலக தலைவர் யார் என்று கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்களிடையே நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் வயது, இனம், பாலினம், பிராந்தியம், கல்வி அறிவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 70 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டில் இதே அமைப்பின் கருத்து கணிப்பில் அவர் முதலிடம் பிடிப்பது இது 3-வது முறை ஆகும்.

இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய விஷயம். இது மோடி மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது.

தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை, கடின உழைப்பு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!