கல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி

நாட்டில் எந்தவொரு பிள்ளைக்கும் கல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்காதிருப்பதற்காகவே தான் நேரடியாக தலையிட்டு, சைட்டம் தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அர்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சைட்டம் நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் இன்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியல் நோக்கங்களைக் கொண்ட பலர் இந்த பிரச்சினையின் பின்னால் இருந்து அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சித்தனர். எனினும் அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலம் குறித்து உரிய கவனம் செலுத்தி சைட்டம் பிரச்சினைக்கு தீர்வை தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது.

சைட்டம் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காதிருந்திருந்தால் 2015ஆம் ஆண்டே அந்த நிறுவனத்தை மூடியிருக்க முடியும். எனினும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் சுமார் 03 வருடங்களாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி அந்த பிரச்சினைக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுத்துள்ளோம்.

நாட்டின் இலவச கல்வியைப் பலப்படுத்தி அரசாங்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனைத்து மனித மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்தும் கொள்கையையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பெயர்ப் பலகையுடன் மாத்திரம் மட்டுப்பட்டிருக்காது தனியார் கல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டிய தரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களுக்கான மருத்துவ பீடத்தின் இட வசதி மற்றும் ஏனைய தேவைகளை மேம்படுத்துவது குறித்து முறையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும.;

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!