நாடாளுமன்றத்தை சுற்றிவளைப்போம்! கோட்டாபய அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை

இந்த அரசாங்கம் உரப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காவிட்டால், எதிர்வரும் 26 ஆம் திகதியன்று விவசாயிகளை ஒன்றிணைத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin bandara) எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

“இந்த அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயல்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

விவசாயத்தில் ஈடுபடுவதற்கு அவசியமான நீர் போதியளவில் காணப்படுகின்றபோதிலும், உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பற்றாக்குறையின் விளைவாக விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
மிகச்சொற்பளவான விவசாயிகள் தமது குடும்பத்திற்குப் போதுமானளவு பயிர்ச்செய்கையில் மாத்திரம் ஈடுபடுகின்றனர். இந்த நெருக்கடியை அரசாங்கம் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. போதியளவு நீர் உள்ளபோதிலும் விவசாயத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதென்பது மிகப்பாரதூரமான பிரச்சினையாகும்.

ஆகவே விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை வழங்கி இந்தப் பிரச்சினையை முடிவிற்குக்கொண்டுவராவிட்டால், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் நாட்டிற்குத் தேவையான அரிசியின் தேவையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் ஊடாகவே பூர்த்திசெய்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதிசெய்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் பாணையே மூன்று வேளையும் உண்ணவேண்டியிருக்கும்.

ஆகவே உணவுப்பாதுகாப்பில் எமது நாடு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் விவசாயத்துறைக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

எனவே அதற்கு முன்னதாக அரசாங்கம் உரப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காவிட்டால், நாம் எதிர்வரும் 26 ஆம் திகதி விவசாயிகளுடன் நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம். குறிப்பாக விவசாயிகளின் ஆயுதங்களுடனேயே அந்தச் சுற்றிவளைப்பு இடம்பெறும் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ளவேண்டும்” என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!