ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது: ரணில்

இலங்கையின் தெற்கில் உள்ள ”மத்தல விமான நிலையம் குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்கப்படவில்லை” என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது எனவும், இது குறித்து சீனாவிற்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனும், சீனாவுடனும் இறையாண்மையுள்ள நாடாகவே இலங்கை பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது இலங்கைப் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ”மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பல மில்லியன் டாலர் கடன்பட்டு, கப்பல்கள் வராத துறைமுகமொன்று அமைக்கப்பட்டது. எனினும், கடனில் இருந்து மீண்டு, கப்பல்கள் வரும் துறைமுகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மாற்ற எம்மால் முடிந்தது. இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்படவில்லை. இந்தத் துறைமுகம் சீனாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்தத் துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது. எமது துறைமுகங்கள், எமது பூமி வேறு நாடுகளின் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இடமளிக்கப்படாது” என்றார்.

மேலும் அவர், “இதுகுறித்து சீனா மெர்சண்ட்ஸ் போர்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போதும், எமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தோம். எமது நிலைப்பாட்டை சீன ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

கப்பல் வராத துறைமுகத்தைப் போன்றே விமானம் வராத விமான நிலையமொன்று மத்தலயில் இருக்கிறது. இதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கடன். மத்தல விமான நிலையம் குறித்து, சீனா நிறுவனம் ஒன்றுடன் நாம் பேச்சு நடத்தினோம். எனினும், சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே, இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். மத்தல விமான நிலையக் கடனில் இருந்தும் விடுபட்டு, விமானங்கள் வரும் விமான நிலையமாக அதனை மாற்றுவோம் என நம்புகிறோம். சீனா எமக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் வழங்கியிருக்கலாம். எனினும், சீனாவுடனும், இந்தியாவுடனும் இறையாண்மையுள்ள நாடாகவே நாம் கொடுக்கல், வாங்கல் செய்கிறோம்” என்று ரணில் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!