சீனாவின் குப்பைகளை கொட்டும் இடம் இதுவல்ல!

சீனாவின் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான இடம் இதுவல்ல. சீனா எந்தளவிற்குப் பலம்பொருந்திய நாடாக இருந்தாலும், அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுவதற்கு நாங்கள் தயாரில்லை. இலங்கையில் இருப்பவர்களை ‘விசித்திரமான விலங்குகள்’ என்றே சீனத்தூதுவர் நினைத்துக்கொண்டிருக்கின்றார். என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அண்மைக்காலத்தில் எமது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் அவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். அதன் ஓரங்கமாக அரசாங்கம் தற்போது முத்துராஜவெல ஈரவலயத்திற்குச் சொந்தமான நிலப்பகுதியை இலக்குவைத்திருக்கின்றது.

அதன்படி வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குக் கீழிருந்த முத்துராஜவெல ஈரநிலப்பகுதியை நகர அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. முத்துராஜவெல ஈரவலயம் மிகப்பெறுமதிவாய்ந்த நிலப்பகுதியாகும்.

அரசாங்கம் நீண்டகாலமாக அப்பகுதியை இலக்குவைத்திருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் தற்போது அதனைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட பல்லின மக்கள் வாழ்கின்றார்கள்.

எனவே அரசாங்கத்தின் இச்செயற்பாட்டினால் எதிர்வருங்காலத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை எதிர்வுகூறமுடியாதுள்ள நிலையில், இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். குறிப்பாக மின்னுற்பத்தி நிலைய மற்றும் மின்சாரசபை ஊழியர்களும் அவ்வொப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு வலியுறுத்தி வேலைநிறுத்தப்போராட்டங்களில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறித்த ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற விடயமும் அவ்வொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் கூறுகின்றார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும். ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையம் தனியொரு நபருக்குரிய சொத்தல்ல. மாறான அது நாட்டுமக்கள் அனைவருக்கும் பொதுவான சொத்தாகும். எனவே அதனை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. அதனை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது.

ஆகவே கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை உடனடியாகப் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். மறுபுறம் ஓய்வூதியப்பயனாளிகளுக்குரிய கொடுப்பனவில் குறித்தளவு தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சொற்பளவிலான கொடுப்பனவை மேலும் குறைப்பதன் விளைவாக, தற்போதைய உயர் வாழ்க்கைச்செலவில் பெருமளவான குடும்பங்கள் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
இவ்வளவு காலமும் காப்புறுதியின்றி தமது ஆரோக்கியத்தை உரியவாறு பேணிய ஓய்வூதியப்பயனாளிகள்மீது தற்போது திடீரென அரசாங்கம் ஏன் அக்கறைகொள்கின்றது? உண்மையில் அரசாங்கத்திடம் போதியளவு நிதியில்லை.

எனவே அதனை ஈடுசெய்வதற்காகவே ‘அக்ரஹார காப்புறுதி’ என்ற போர்வையில் ஓய்வூதியக்கொடுப்பனவில் குறைப்பைச் செய்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. மேலும் நாடளாவிய ரீதியில் உரத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பற்றாக்குறையின் விளைவாக விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ‘கழிவு உரத்தை’ எமது நாட்டில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சீனாவின் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான இடம் இதுவல்ல. சீனா எந்தளவிற்குப் பலம்பொருந்திய நாடாக இருந்தாலும், அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுவதற்கு நாங்கள் தயாரில்லை. எமது அரசாங்கமும் அதனை நன்கு புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

வெளிநாடுகளுடனான கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் வர்த்தக ரீதியான தொடர்புகளின்போது எமது நாட்டின் சுயாதீனத்தன்மை, இறையாண்மை மற்றும் கௌரவத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் முன்னெடுக்கவேண்டும். அதேவேளை இவ்விவகாரத்தில் சீனா மிகமோசமான விதத்திலேயே நடந்துகொள்கின்றது.

இலங்கையில் இருப்பவர்களை ‘விசித்திரமான விலங்குகள்’ என்றே சீனத்தூதுவர் நினைத்துக்கொண்டிருக்கின்றார். எமது நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே ‘கழிவு உரம்’ அடங்கிய கப்பலை அவரது நாட்டிற்குத் திருப்பியனுப்பவோ அல்லது வேறு ஏதேனும் இடங்களில் நங்கூரமிடச்செய்யவோ முடியும் என்று சீனத்தூதுவருக்குக் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம்.
எமது நாட்டிலுள்ள உரிய கட்டமைப்புக்களின் தீர்மானங்களைமீறி அவர்கள் தன்னிச்சையாக செயற்படமுடியாது என்று குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!