போராட்டங்களால் அரசை வீழ்த்த முடியாது!

போராட்டங்கள் ஊடாக மீண்டும் கொவிட் வைரஸ் பரவலை தீவிரப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். போராட்டங்களின் பின்னணியில் அரச சார்பற்ற அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் உள்ளன. போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
    
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்பட்டது. தென்னாசிய வலய நாடுகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரச நிர்வாகத்தையும்,அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஒரு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக புதுவருட கொவிட் கொத்தணி பரவல் தீவிரமடைந்தது அதன் தாக்கத்தை முழு நாடு எதிர்க் கொள்ள நேரிட்டது.

நீண்ட முடக்கத்திற்கு பிறகு நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. போராட்டங்கள் ஊடாக மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவலை தீவிரப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
போராட்டங்களின் பின்னணியில் அரச சார்பற்ற அமைப்புக்களும், மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் தாக்கத்தின் காரணமாக அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. அவ்வாறான நிலையிலும் ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அரசாங்கம் தீர்மானம் முன்வைத்தது அதற்கு தொழிற்சங்கத்தினர் இணக்கம் தெரிவிக்கவில்லை.
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சம்பள பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.

சம்பள அதிகரிப்பில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்தினால் மறுபுறம் ஏனைய தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!