பிரதமரை சந்திக்கும் பங்காளிகள்! – இணக்கம் வராவிட்டால் ஆட்சி மாற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியின் உறுப்பினர்களுக்கும், இடையிலான விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அவ்விடயம் தொடர்பில் பிரதமரிடம் விசேடமாக கலந்துரையாடவுள்ளோம்.

வாழ்க்கை செலவு நியாயமற்ற வகையில் அதிகரித்து செல்கின்றதன் காரணமாக மக்கள் ஒட்டுமொத்த அரசியலையும் வெறுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மக்கள் மத்தியில் இருந்து விலகியுள்ளதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது.

அரசாங்கத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பல்வேறுப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் வகையில் அமையவில்லை.

கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தை முன்னிலைப்படுத்தி தீர்வு காண பங்காளி கட்சியின் ஒருசில தரப்பினர்கள் தீர்மானித்துள்ளார்கள். முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பங்காளி கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது. நடப்பு அரசியல் முறைமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக உள்ளது.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடின் மக்கள் பிறிதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஜயமுமில்லை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!