இந்தியாவை சீண்டும் நேபாளம்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் மாவட்டத்தில் உள்ள காலாபானி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை நேபாளம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலமாக, இருநாட்டுக்கும் இடையே மீண்டும் எல்லைப் பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , இந்திய நேபாள எல்லையில் கதியாபகர் முதல் லிபுலேக் வரையிலான வழித்தடத்தில் 74 கிமீ புதிய சாலையை தொடங்கி வைத்தார். இதற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது.

தங்களின் பிராந்தியத்தின் வழியாக சாலை போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம், பிதோராகர் மாவட்டத்தின் பகுதிகள் என ஒன்றிய அரசு கூறும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்தில் கடந்தாண்டு சேர்க்கப்பட்டது. இது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழ் சபையும் ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைப்பகுதியை நேபாளம் மதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இதன் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நேபாள அரசு தற்போது தொடங்கி உள்ளது. நேபாளத்தில் 12வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 25ம் தேதி கணக்கெடுப்பு பணிகள் முடிகிறது. காலாபானியின் கஞ்ச், நபி மற்றும் குடி கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஆனால், இந்த பகுதிகளில் நேரடியாக குழுக்களை அனுப்பி தரவுகளை சேகரிக்க இயலாது என்பதால் புள்ளி விவரங்களை திரட்டுவதற்கான வேறு வழிகளை கையாளவும் முடிவு செய்துள்ளது. செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் இதர தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வீடுகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்த கணக்கெடுப்பு மறைமுக மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 2011ம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகையை கணிக்கவும் நேபாளம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
பின்னணியில் சீனாவா?

சீனாவின் பக்கம் பாகிஸ்தான் சாய்ந்த பிறகு, அடுத்த அண்டை நாடான நேபாளத்தையும் இந்தியாவுக்கு எதிராக சீனா தூண்டி விட்டுள்ளது. இந்நாட்டு பிரதமராக சர்மா ஒலி இருந்தபோது, யோகா தனது நாட்டில் தோன்றியதாக இந்தியாவை சீண்டினார். ராமரும் தனது நாட்டில் பிறந்ததாக சொந்தம் கொண்டாடினார். இவருடைய ஆட்சியின்போது தான், இந்திய பகுதிகளை தனது நாட்டு வரைபடத்தில் சேர்த்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். தற்போதுள்ள பிரதமர் ஷெர் பகதூர் துபாவும், இந்திய பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முயற்சிப்பது, இதன் பின்னணியில் சீனா உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலாபானியின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இதுவரை எந்த புள்ளி விவரங்களும் நேபாளத்திடம் இல்லை. எனினும், கடந்த 1961ம் ஆண்டு இங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவும், நேபாளமும் 1,880 கிமீ தூர எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில், 98 சதவீத எல்லைப் பகுதிகள் தெளிவாக உள்ளது. மீதமுள்ள லிபுலேக் கணவாய், காலாபானி, லிம்பியதூரா பகுதிகள் இரு நாட்டுக்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதிகளாகவே இருந்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!