வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே: உச்ச நீதிமன்றம்

வழக்குகளை யார் விசாரிப்பது என்று முடிவு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுவதாக (சமீபத்தில் ஓய்வு பெற்ற) நீதிபதி செலமேஸ்வர் உள்ளிட்ட 4 மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தனர்.

இது நீதித்துறையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நீதிபதி லோயா கொலை வழக்கின் விசாரணையை மூத்த நீதிபதி அல்லாத வேறொரு நீதிபதிக்கு ஒதுக்கியதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூஷன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், வழக்குகளை எந்த நீதிபதிக்கு ஒதுக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிக்கு பதிலாக கொலிஜியம் முடிவு செய்ய வேண்டும் என்றும் இதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், அரசியல் சாசனத்தின்படி, தலைமை நீதிபதி பரிந்துரை செய்ய, மத்திய அரசுதான் நீதிபதிகளை நியமிக்கும். ஆனால், 1993ஆம் ஆண்டு இது மாற்றியமைக்கப்பட்டது. தலைமை நீதிபதிக்கு பதிலாக கொலிஜியம் முறை கொண்டுவரப்பட்டது.

இப்படி இருக்கும்போது வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதையும் கொலிஜியம் முடிவு செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

தலைமை நீதிபதிதான் தீர்மானம் செய்வார்

இந்த வழக்கை விசாரித்து தீர்பளித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்குகளை யாருக்கு ஒதுக்குவது, அதன் முக்கியத்துவம் என்ன, யாரால் அவற்றை நன்றாக விசாரிக்க முடியும் என்ற அடிப்படையில் தலைமை நீதிபதிதான் இதனை தீர்மானம் செய்கிறார்.

காலம் காலமாக இந்த நடைமுறை உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், பல அரசியல் சாசன அமர்வுகள் இதனை உறுதி செய்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நடைமுறை சாத்தியமில்லை

தினமும் ஐந்து நீதிபதிகள் கூடி வழக்கை யார் விசாரிப்பது என்று முடிவு செய்வது நடைமுறை சாத்தியமில்லை என்பதால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிகள் நியமனங்கள் வேறு, வழக்கை விசாரிக்க ஒதுக்குவது என்பது வேறு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!