இலங்கை தாதா கொல்லப்பட்ட விவகாரம்: மரபணு சோதனையில் தெரிந்த ஒரு உண்மை!

தமிழகத்தின் கோவையில் உயிரிழந்த நபர் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மன்னனும் தாதாவுமான அங்கொட லொக்காதான் என்பது மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனாக இருந்தவா் அங்கொட லொக்கா. இவர் தமிழகத்தின் கோவை, சேரன்மாநகா் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா 2020 ஜூலை 4இல் உயிரிழந்தாா். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தைப் பெற்று சென்று அம்மானி தான்ஜி மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரையில் தகனம் செய்தனா்.

சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் நடத்திய விசாரணையில், இலங்கையைச் சோ்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவகாமி சுந்தரி, திருப்பூரைச் சோ்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

அம்மானி தான்ஜி முகாமில் வைக்கப்பட்டுள்ளாா். அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை கோவை சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் தேடி வந்தனா்.
இந்நிலையில், அவா்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. சிவகுமாா் தலைமையில் தனிப்படையினா் பெங்களூரு சென்றனா். பெங்களூரு, குள்ளப்பா சா்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவைச் சோ்ந்த நலின் சதுரங்கா என்ற சனுக்கா தனநாயகா (38), பெங்களூரு, சுப்பையாபாளையத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (46) ஆகியோரை காவலர்கள் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சனிக்கிழமை இரவு கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அங்கொட லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவும், இலங்கை அரசின் உதவியுடன் அங்கிருக்கும் அவரது தாயார் சந்திரிகாவின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டதில், கோவையில் இறந்தது அங்கொட லொக்காதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!