பேரணியில் குண்டுவெடிக்கும் என எச்சரித்தவர் கைது!

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு கடதாசியில் குறிப்பை வழங்கிய நபர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

குறித்த நபர் மனநலம் குன்றிய சந்தேக நபர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட சந்தேகக் குறிப்பு தொடர்பில் கறுவாத்தோட்டப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரினால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், குறித்த குறிப்பைக் கையளித்த சந்தேக நபரை கறுவாத்தோட்ட பொலிஸாருடன் இணைந்து குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றார்.

சந்தேக நபரின் பையில் இருந்து காகிதங்களில் எழுதப்பட்ட இதே போன்ற பல குறிப்புகளையும் மீட்டதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!