அரசாங்கம் நாசமாகி போனாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லமாட்டோம்!

அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க புதிய முறையில் சிந்திப்பது என்பது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதல்ல. எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்த காலத்தில் பல தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றனர். என்.எம் பெரேரா முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றதாகவும் கூறினர். இது முழுப்பொய்யாகும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டாம் என்பதையே அவர் கூறினார்.

அவர்களின் முதல் கோரிக்கையே ரூபாவின் பெறுமதியை குறைப்பதாகும், ஆகவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது என்பது சிறைக்கு செல்வதற்கு சமமானது. சிறையில் குறைந்த பட்சம் உணவாவது கிடைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் எம்மையே உணவாக்குவார்கள். எனவே இது மிக மோசமான காரணியாகும்.

மிகவும் நெருக்கடியான நிலையிலேயே இந்த வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரச நிதி நெருக்கடி உள்ள நிலையிலும், டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச சந்தையில் விலை உயர்வு காணப்படுகின்ற நிலையிலும், ஏனைய பல சிக்கல்கள் உள்ள நிலையிலும் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும்.

இதற்கு எதிர்க்கட்சியிடம் தீர்வு உள்ளதா? எனவே இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். கஷ்டப்படும் மக்களின் நலன்கள் குறித்தும் இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன, அதேபோல் சில மோசமான முன்மொழிவுகள் உள்ளன. கொவிட் வைரஸ் தொற்றுகள் இல்லாதிருந்திருந்தால் வேறு விதமாக இந்த வரவு செலவு திட்டம் உருவாகியிருக்கும். இன்று வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டே இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் வர்க்க வாதத்திற்கு அமையவே இது பாதிப்பை செலுத்தும் என்பதை எம்மால் மட்டுமே உணர முடியும். கஷ்டப்படும் அப்பாவி மக்கள் தொடர்ந்தும் கஷ்டப்பட வேண்டிவரும், பணம் படைத்த மேல் வர்க்கத்தினருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆகவே அரசாங்கம் நாசமாகி போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம். அதுவே எமது உறுதியான நிலைப்பாடு என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!