மோசமடையும் காற்று மாசு: டெல்லியில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடல்!

அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதின்பேரில், கடந்த 13-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அதன் பின், காற்று மாசு மோசமாகியிருப்பதை கருத்தில்கொண்டு டெல்லியில் 15-ந் தேதி முதல் ஒரு வார காலம் பள்ளிகள் மூடப்படும், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம், 17-ந் தேதி வரை (நேற்றுவரை) கட்டுமானப் பணிகள் தடை செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.

இந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த அறிவிப்புவரும் வரையில் அவற்றை மூடவும், அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற வெளிவாகனங்களுக்கு தடை விதிக்கவும் டெல்லி அரசு நேற்று முடிவு எடுத்தது. இதை சுற்றுச்சூழல் மந்திரி கோபால்ராய் தெரிவித்தார்.

மேலும் டெல்லி அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதும், கட்டுமானப்பணிகள் மீதானதடையும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது. பொது போக்குவரத்தை மேம்படுத்த ஆயிரம் தனியார் சி.என்.ஜி. பஸ்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!