இங்கிலாந்தில் தொடர் கற்பழிப்பு குற்றவாளியின் உயிரை பறித்த கொரோனா!

இங்கிலாந்து நாட்டின் ஹிண்ட்லி நகரை சேர்ந்தவர் டென்னிஸ் ஸ்மலி. 70 வயதான இவர் 1970-ம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் தொடர் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தொடர்ந்து பல பெண்களையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதற்கிடையில், டென்னிஸ் ஸ்மலி கடந்த 2016-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 25 கற்பழிப்பு வழக்குகள் உள்பட மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து டென்னிஸ் ஸ்மலி மீதான வழக்குகள் லிவர்புல் நகரின் வாக்பில்ட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரணையில் முடிவில் டென்னிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால், அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை தொடர்ந்து டென்னிஸ் வாக்பில்ட் நகரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் 2016 முதல் தற்போதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த டென்னிசுக்கு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட போது டென்னிசுக்கு கடந்த மார்ச் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா உறுதியானதையடுத்து டென்னிஸ் மார்ச் 11-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 70 வயதான தொடர் கற்பழிப்பு குற்றவாளி டென்னிஸ் கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் மார்ச் 16-ம் தேதி உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!