அரசாங்கத்தை வீழ்த்தமாட்டோம்!

அரசாங்கத்துடன் எமக்கு முரண்பாடுகள் உள்ளன, அதற்காக மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை, அரசாங்கத்தை பாதாளத்தில் தள்ளாது மீட்டெடுக்கவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை , அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
“ எதிர்க்கட்சியினர் இன்று மீண்டும் தமக்கு ஆட்சியை கொடுக்குமாறு கேட்கின்றனர், 2015 ஆம் ஆண்டில் நீங்கள் ஆட்சியை கைப்பற்றும் வேளையில் 6 வீத பொருளாதார வளர்ச்சியில் இருந்த நாட்டையும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டையும் பெற்றுக்கொண்டீர்கள், ஆனால் நீங்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அரசாங்கத்தை கொடுக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.5 வீதமாகவும், அதேபோல் அழிக்கப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கியே எம்மிடம் கொடுத்தீர்கள்.

அதுமட்டுமல்ல நான்கரை ஆண்டுகளில் நாட்டின் கடன் சுமையை இரு மடங்கு அதிகரித்தீர்கள். அவ்வாறான நபர்கள் மீண்டும் ஆட்சியை கேட்கின்றனர்.

தேசிய பொருளாதார கொள்கையில் இருந்து விடுபட்டு திறந்த பொருளாதார கொள்கையில் நாட்டை கொண்டு சென்ற தரப்பினர், கடன்களை பெற்று நாட்டினை இன்று நெருக்கடிக்குள் தள்ளியுள்ளீர்கள்.
அதுவே இன்று பாரிய நெருக்கடியில் விழுந்துள்ளோம். இது சற்று தாமதமாக முகங்கொடுக்க வேண்டிய சவாலாக இருந்தும் கொவிட் நெருக்கடிகளினால் முன்கூட்டியே நெருக்கடியில் விழுந்துள்ளோம்.

இந்த நிலையில் எம்மால் பழைய அரசியல் விளையாட்டுக்களை முன்னெடுக்க முடியாது. இன்று புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது, அதன் மூலமாக நாட்டுக்கான நிதியை சேகரிக்க வேண்டியுள்ளது, அதனை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதி முன்னெடுத்த தீர்மானங்கள் உணர்வு பூர்வமான, உண்மையான நோக்கத்தில் இருந்தாலும் கூட அதில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன.

பொருத்தமான தீர்மானங்கள் எடுப்பதில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. அதனை அவர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் என்ன குறைபாடுகள் இருந்தாலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் நாம் வெற்றி கண்டுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று நாடுகளின் பச்சை பட்டியலில் உள்ள இலங்கையை சிவப்பு பட்டியலில் தரப்படுத்தவே எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.

புதிய யதார்த்தத்தில் புதிய சிந்தனைகளை கொண்டு ஆர்ப்பாட்டங்களை வேறு விதமாக நடத்துங்கள், அதை விடுத்தது பழைய முறைமையில் சிந்திக்க வேண்டாம். ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து கொவிட் வைரஸ் பரப்ப வேண்டாம். இதனால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி காணும், விமான நிலையங்கள் மூடப்படும், அவ்வாறான நிலைக்கு நாட்டை தள்ள வேண்டாம். சுற்றுலாத்துறையை வீழ்த்த வேண்டாம், தொழிலாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர், அவற்றை மீண்டும் மூட வேண்டாம்.

அரசாங்கத்துடன் எமக்கு முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அதற்காக மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை, சுகாதாரத்தை பலவீனப்படுத்தி மக்களை மீண்டும் கொரோனா நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம்.

நாம் அரசாங்கத்தை சரியான திசைக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கின்றோம். நாம் நரகத்தின் நண்பர்கள் அல்ல, நாம் நரகத்திற்கு மக்களை கொண்டு செல்ல விரும்பவில்லை. எமக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றோம். அதேபோல் தேசிய பொருளாதரத்தை பலப்படுத்தி தேசிய ரீதியில் பலமடையவே முயற்சிகின்றோம்.

பொது மக்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் எமக்கு உள்ளது, அதனை முன்னெடுக்கவே நாம் முயற்சிகின்றோம், வெறுமனே அரசியல் நாடகம் நடிக்க நாம் தயாரில்லை. இந்த நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும், நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!