இத்தாலியில் 5,300 ஆண்டுகளுக்கு முன் இருந்த பனி மனிதனை கொன்றது யார்..? விசாரணையில் காவல்துறை அதிகாரிகள்!

இத்தாலியில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன பனிமனிதனின் வழக்கை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பனிமனிதனின் பின்புறத்தில் ஒரு அம்பு தைத்திருந்தது.

அந்த அம்பு அவருடைய முக்கியத் தமனியை தாக்கியதால், ஏற்படுத்திய தாக்கத்தால் சில நிமிடங்களுக்குள் அவர் இறந்துவிட்டார். அவரது சடலம் பனிக்குள் புதைந்து, பாதுகாப்பாக இருந்தது. உலகில் பழமையான மற்றும் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட உடல்களில் ( மம்மி) ஒன்றாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது. 1991-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஓட்ஸியின் சடலத்தின் இடது தோளில் அம்பின் நுனி ஒன்று இருப்பது பத்து ஆண்டுகள் கழித்து, கண்டறியப்பட்டது.

ஆனால், ஓட்ஸி எப்படி கொல்லப்பட்டார் என்ற விசாரணை சமீபத்திய மாதங்களில் தான் தொடங்கப்பட்டது. விசாரணையில் மூத்த காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான புலனாய்வாளர்கள் தீவிர கவனம் செலுத்துகின்றனர். வழக்கமாக, 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முந்தை வழக்குகளை தான் விசாரணை செய்துள்ளோம், ஆனால், 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு, இந்த வழக்கினை தீர்த்து வைக்க முடியுமா என்று தெரியவில்லை என துப்பறியும் துறையின் தலைமை ஆய்வாளர் அலெக்ஸாண்டர் ஹார்ன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஓட்ஸியின் வயிற்றின் உள்பகுதிகள், உடல் காயங்கள் குறித்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டார் ஹார்ன். ஓட்ஸி தாக்கப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அவர் அங்கு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். மதிய உணவு அல்லது மாமிசத்தை ஓட்ஸி அதிகமாக உட்கொண்டிருந்தார், எனவே அவர் அவசரத்தில் இருந்ததாகவோ, தப்பிச் செல்லவோ முயன்றதாகவோ தெரியவில்லை.

ஓட்ஸியின் உணவு பழக்கம், உடுத்தும் முறை மற்றும் அவரது நவீன சந்ததியினர் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்யமுடிந்தது, மற்றுமொரு முக்கியமான துப்பு அவரது வலது கையில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து கிடைத்தது. இதனை அடிப்படையாக வைத்து விசாரைணையை தொடங்கியுள்ளதாக ஹார்ன் தெரிவித்துள்ளார்.

Tags: ,