புலம்பெயர்வோரை சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்கு கடத்த முயன்ற நபர் கைது!

மோசமான நிலையிலிருந்த படகு ஒன்றில் 69 புலம்பெயர்வோரை சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குக் கடத்த முயன்ற சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். Arturas Jusas (35) என்ற லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த அந்த குற்றவாளி, லண்டனிலுள்ள தனதுவீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
    
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி, Svanic என்ற மீன்பிடி படகை எல்லை பாதுகாப்பு படையினர் வட கடல் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டார்கள்.

60 ஆண்டுகள் பழமையான அந்த படகு, மோசமான நிலையில் இருந்தது. அது பெல்ஜியத்திலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. அதில் 69 அல்பேனிய நாட்டவர்களான புலம்பெயர்வோர் இருந்தார்கள்.

படகை செலுத்தியர்களைச் சேர்த்து அந்த படலில் 72 பேர் இருந்த நிலையில், அதில் விபத்து ஏதாகிலும் நிகழ்ந்தால் தப்புவதற்காக, ஒரே ஒரு அவசர கால படகும், 20 லைஃப் ஜாக்கெட்களும் மட்டுமே இருந்தன.

அதாவது, ஆபத்தான வகையில் அந்த மோசமான நிலையிலிருந்த படகில் 69 புலம்பெயர்வோர் உயிரை பணயம் வைத்து பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட Arturasஐ தற்போது பொலிசார் சுற்றி வளைத்துக் கைது செய்தார்கள்.

Arturas அவர்களுடன் மொபைலில் மேற்கொண்ட உரையாடலில், வாரம் ஒன்றிற்கு 50 புலம்பெயர்வோரை கடத்த இருப்பதாக தெரிவித்தார். அதற்காக பெருந்தொகையும் பேசப்பட்டது.
ஆகவே, ஆபத்தான வகையில் புலம்பெயர்வோரை சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் கடத்தும் விடயத்தில் மூளையாக செயல்பட்டதற்காக Arturas கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஐந்து பேருக்கும் தண்டனை வழங்கும் திகதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!