புடவை அணிவித்து மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர்: அதிர்ச்சி பின்னணி!

குஜராத் மாநிலம் வதோரதா மாவட்டம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்ஷ் ராவல். 20 வயதான ஜெய்ஷ் ராவலும் அதேகிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
    
ஆனால், இந்த காதலுக்கு ஆர்த்தியின் குடும்பத்தினர் தரப்பில் எதிர்ப்பு இருந்துள்ளது. தனது மகளுடனான காதலை விட்டுவிடுமாறும் இல்லையே கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ராவலிடம் ஆர்த்தியின் தந்தை காளிதாஸ் கடந்த 2 மாதங்களுகு முன்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் எச்சரிக்கையையும் மீறி ராவல் தனது காதலி ஆர்த்தியை அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், காளிதாசின் தோட்டம் அருகே நேற்று ஆர்த்தியை ராவல் தனியாக சந்தித்து பேசியுள்ளார். தனது மகளிடம் ராவல் பேசுவதை ஆர்த்தியின் தாயார் பார்த்துள்ளார். இதனால், ராவல் அங்கிருந்து ஓடி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

ராவல் – ஆர்த்தி சந்தித்து பேசியது இது குறித்து ஆர்த்தியின் தாயார் தனது கணவர் காளிதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்களான கிரன் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகிய 4 பேர் ராவல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் ராவல் மட்டுமே இருந்ததால் அவரை வீட்டில் இருந்து தரதரவென இழுத்து வெளியே வீசினர். மேலும், ராவலுக்கு புடவை அணிந்து மரத்தில் கட்டி வைத்து கட்டைகளால் கடுமையாக தாக்கினர். ஆர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கியதில் ராவல் மயக்கமடைந்தார். ஆனாலும், அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

காளிதாஸ் தாக்குதல் நடத்துவது குறித்து தகவலறிந்த ராவலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால், ராவலின் உறவினர்கள் வருவதற்கு முன்னர் தாக்குதல் நடத்திய காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மரத்தில் கட்டப்பட்டு படுகாயங்களுடன் மயக்கநிலையில் இருந்த ராவலை அவரின் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ராவலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

ராவல் தனது காதலி ஆர்த்தியின் குடும்பத்தினரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்களான கிரன் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராவலை கட்டிவைத்து அடித்த சம்பவத்தை காளிதாசின் உறவினர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!