ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொந்தரவு

நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லங்களில் ஜனாதிபதி ஒரு நாள் கூட தங்கியதில்லை எனவும் அவற்றை அவருக்கு நெருக்கமான நபர்கள் மாத்திரமே பயன்படுத்தி வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

7 முதல் 8 வரையில் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் நாடு முழுவதும் உள்ளன. ஜனாதிபதி மிரிஹானவில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கியிருப்பது நல்லது என்றாலும் அவர் ஜனாதிபதி இல்லத்திற்கு சென்று குடியேறுவதை நான் விரும்புகிறேன்.

ஜனாதிபதி மிரிஹானவில் உள்ள வீட்டில் இருப்பது அக்கம், பக்கம் உள்ளவர்களுக்கு தொந்தரவு. ஜனாதிபதி அங்கு தங்கி இருப்பதால், அடிக்கடி பொலிஸாரை கொண்டு சோதனைகள் நடத்தப்படுவதால், மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.

சிறிய வர்த்தகங்களுக்கு இதன் மூலம் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!