சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பி ஓட்டம்: ஊரடங்கு சட்டம் அமுலாகியது

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பியுள்ளதை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிறைக்கைதிகள் தப்புவது மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

கடந்த மாதம் தலைநகரான Kinshasa சிறையில் இருந்து சுமார் 4,000 கைதிகள் ஒரே நாள் இரவில் தப்பினர். இதில் சிலர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, நேற்று North Kivu மாகாணத்தில் உள்ள Beni சிறைச்சாலையில் இருந்து 900 கைதிகள் தப்பியுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரவாத குழு ஒன்று சிறை அதிகாரிகள் 8 பேரை சுட்டுக் கொன்று விட்டு கைதிகளை விடுவித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நகர் முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டின் அதிபரான ஜோசப் கபிலா என்பவரின் பதவிக்காலம் கடந்த வருடம் முடிவடைந்தது.

ஆனால், பதவியை விட்டு விலகாமல் தொடர்ந்து ஆட்சியை நீடித்து வருவதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: