சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம், தமது நாட்டு குடிமக்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

சிறிலங்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய பிரித்தானிய அரசின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை.

2009 மே மாதம், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011 இல் அவசரகாலச்சட்ட விதிகள் தளர்த்தப்பட்டன.

ஆனால், நாட்டின் சில பகுதிகளில் இறுக்கமான இராணுவ நடைமுறைகள் உள்ளன. 2014 ஏப்ரலில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் என்று குற்றம்சாட்டி மூன்று பேரை சிறிலங்கா இராணுவத்தினர் நெடுங்கேணியில் சுட்டுக் கொன்றனர்.

சிறிலங்காவுக்கு செல்லும் பிரித்தானிய குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இராணுவப் பிரதேசங்கள், உயர் பாதுகாப்பு வலயங்களை தவிர்க்க வேண்டும்.

ஒளிப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். தடுத்து நிறுத்தப்படும் போது, அடையாள ஆவணத்தை காட்ட வேண்டும்.

சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம், குற்றச்சாட்டுகள், விசாரணையின்றி நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது. பிரித்தானிய தூதரகத்துடன் தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த பயண எச்சரிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: ,