தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    
தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது, வரும் நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 25-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல்மிக கனமழை பெய்யும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியடெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இதர தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

27-ம் தேதி கடலூர், விழுப்புரம்,காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடியமிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் 25-ம் தேதி குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், 26-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 27, 28-ம்தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத் தில் சூறாவளி காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர் கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவு மற்றும் இருப்பை தொடர்ந்து கண்காணிக்கவும், மழை நீரை தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்வர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!