என்ன நடக்கும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்! நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்த மைத்திரி

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் இன்று நடாளுமன்றத்தில் விமா்சன மோதல் ஏற்பட்டது.
ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தொடர்பாக, அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே சுமத்திய குற்றச்சாட்டுக்கு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜெயசேகர பதில் வழங்கும் போது அமைச்சர் மஹிந்தாநந்த மீது கடும் விமர்சனங்களை வெளியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது பதவிக்காலத்தின்போது 200 வாகனங்களை பயன்படுத்தியதாக மஹிந்தாநந்த அளுத்கமகே அண்மையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

எனினும் இதனை மறுத்த தயாசிறி ஜெயசேகர, மஹிந்தாநந்த அளுத்கமகேயின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டார். அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே, தற்போது மயிலைப்போன்று முன்னால் ஆடும்போது அவரின் பின்னால் உள்ள விடயங்கள் தெளிவாக தெரிவதாக தயாசிறி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி இன்று மூன்று வாகனங்களை பயன்படுத்துவது சிறந்த விடயம். எனினும் அவர், கொழும்பில் பயணிக்கும் போது மூன்று வாகனங்களை பயன்படுத்துகிறார்.

தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் போது வாகனத் தொடரணியைப் பயன்படுத்துகிறார் என்று தயாசிறி குறிப்பிட்டார்.

இந்தநிலையில், தமது கருத்தை வெளியிட்ட அவை தலைவர் தினேஸ் குணவர்த்தன, ஆளும் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று குறிப்பிட்டார்

இதேவேளை தம்மீது சுமத்தப்பட்டகுற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே, மைத்திரிபால சிறிசேன காலத்தை விட தற்போதைய ஜனாதிபதியின் பாதீட்டில் ஒரு பில்லியன் ரூபா மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே தமது ஜனாதிபதியை பற்றி பேச தமக்கு உரிமையுள்ளதாக அவர் தெரிவித்தார் அத்துடன் முன்னாள் அமைச்சா்கள் சரத் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல மற்றும் முன்னாள் ஜனாதிபதி டி பி விஜயதுங்க ஆகியோர் பயன்படுத்திய மூன்று வீடுகளை இணைத்து பொிய வீடு ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன தற்போது வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிய தமக்கு விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டார்.
தம்மை பொறுத்தவரை, தமக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகளின் பாதீடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 பிரதிநிதிகள் காரணமாகவே இன்று அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எனவே அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் இருந்தால் அரசாங்கத்துக்கு என்ன நடக்கும் என்று மைத்திரிபால எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவிடம், பேசிய மஹிந்தாநந்த அளுத்கமகே, ”தமது பொியவரை” (ஜனாதிபதியை) மேம்படுத்தவேண்டும் என்பதற்காகவே மைத்திரிபாலவின் வாகனங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை கூறியதாக தெரிவித்துள்ளதாக மைத்திரிபால குறிப்பிட்டார்.

மஹிந்தாநந்த அளுத்கமகே, இன்று அரசாங்கத்துக்கு பொய் கூறியுள்ளார், விவசாயிகளுக்கு பொய் கூறியுள்ளார், நாட்டுக்கு பொய் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இன்று விவசாயத்துறையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மைத்திரிபால கூறினார் 

மஹிந்தாந்த அளுத்கமகேயின் உருவப்பொம்மையை எவரும் தீயிடவில்லை. மஹிந்தாநந்த அளுத்கமகே தமது உருவப்பொம்மையை தாமே எரியூட்டிக்கொண்டதாக மைத்திரிபால குறிப்பிட்டார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!