தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை!

தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தையோ, அவர்களின் விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை, தமிழர் பூமியில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு சந்தேகங்கொள்ள வேண்டாம் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை சிங்கள பெளத்த மயமாக்குகின்றோம் என்ற குற்றச்சாட்டை தமிழ் அரசியல் தரப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். பாதுகாக்க வேண்டிய பகுதிகளை பாதுகாக்க நாம் தயாராக உள்ளோம். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற நோக்கத்தில் இவற்றை பாதுகாக்கவில்லை. அல்லது இந்து பெளத்த, கிருஸ்தவ, முஸ்லிம் அடிப்படையிலும் அல்ல, இது இலங்கைக்கென்ற அடையாளம் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்படுகின்றது. இந்த நிகழ்காலத்தை நாம் எதிர்காலத்திற்கு கொண்டு சேர்க்கின்றோம். ஆக்கிரமிப்பு ரீதியில் இது முன்னெடுக்கப்படுகின்றது என்றோ, அல்லது மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு நினைக்கலாம்.

ஆனால் அது இடம்பெறவில்லை. தமிழ் மக்களின் பூர்வீக நிலமோ, அவர்களின் விவசாய நிலங்களோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை. இதனை மீண்டும் மீண்டும் நாம் தெரிவித்தும் அதனை தமிழர் தரப்பு நம்ப மறுக்கின்றது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். சிதைந்த உறவினை மீளவும் கட்டியெழுப்புவோம் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ,
அமைச்சரின் கருத்துக்களை ஒரு பொதுவான கருத்தாக பார்த்தாலும் கூட,ஒரு சில பெளத்த குருமார்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கையில் எமக்கு அச்சம் ஏற்படுகின்றது என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் , யாரும் எந்தக் கருத்தையும் கூறலாம், ஆனால் தீர்மானம் எடுப்பது நாங்களே. எனவே இது குறித்து நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வடக்கு கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்துகொள்ள ஒரு விடயத்தை கூருகின்றேன்.

கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கலை, கலாசார மண்டபங்களை வடக்கு கிழக்கிற்கும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பாலமொன்றை கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!