கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிராமபுரங்களில் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

நகரபுறங்களில் பரவலாகக் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தற்போது கிராமப்புறங்களிலும் கணிசமாக பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிராம புறங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய நிலைமையினைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமானது எனவும், சுகாதார விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிப்பது இதற்கு சிறந்த வழியாகுமெனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பண்டிகைக்காலம் நெருங்கும் நிலையில், மற்றுமொரு முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்துவதனை தவிர்ப்பதற்கு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உரிய நேரத்தில் முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை என முன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், நாடு முடக்கப்பட்டதன் விளைவாக தற்போது நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்த முடியாது எனவும், சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் பொது மக்களை வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!